tamilnadu

img

கழற்றி விடுக!

தமிழக அமைச்சர்கள் சிலரின் செயல்கள் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்கு சென்றபோது பழங்குடி யின சிறுவர் ஒருவரை அழைத்து தன்னுடைய கால் செருப்பை கழற்றிவிடுமாறு கூறியுள்ளார்.  இதற்கு பலத்த கண்டனம் எழுந்தநிலையில், கோவிலுக்கு செல்லலாம் என சிலர் கூறியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறு வனை அழைத்து தன்னுடைய கால் செருப்பின் கொக்கியை கழற்றிவிடுமாறு கூறியதாகவும், தன்னுடைய பேரனைப் போல நினைத்துத்தான் அவ்வாறு கூறியதாகவும் வேறு எந்த உள்நோக்க மும் இல்லை என்றும் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

அந்த சிறுவனை அமைச்சர் அழைக்கும் விதமே அநாகரிகமாக உள்ளது. தன்னுடைய உதவியாளர்களை இவ்வாறு செய்யவிடாமல் இருப்பதற்காக சிறுவனை அழைத்ததாக அவர் கூறுகிறார். இதிலிருந்து அவர் எப்பொழுதும் தன்னுடைய கால் செருப்பு கொக்கியை அவராக கழற்றுவதில்லை என்று தெரிகிறது. இதற்காக வருத்தம் தெரிவிப்பதாக அவர் கூறியிருந்தபோதும் அதிகாரத் திமிரும், ஆண வமும் அவரிடம் குறைந்தபாடில்லை. 

மறுபுறத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மைக் காலமாக ஆர்எஸ்எஸ்காரர்களுடன் போட்டியிடும் நிலையில் பேசி வருகிறார். தமிழகத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தை யும் கெடுக்கும் வகையில் அவரது பேச்சுக்கள் அமைந்துள்ளன.  தந்தை பெரியார் குறித்த நடிகர் ரஜினி காந்தின் கருத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் போன்ற வர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் ராஜேந்திர பாலாஜியோ பெரியாரை இழிவு படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது தொடர்ந்து வன்மத்துடன் அவர் விஷம் கக்கி வருகிறார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆர்எஸ்எஸ் ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்துவதை தேச பக்தச் செயல் என ராஜேந்திர பாலாஜி நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். தன்னு டைய நேர்காணல்களில் மதக் கலவரங்களை தூண்டும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை கெடுக்கும் வகையிலும் அவர் பேசி வருகிறார். 

தான் வகிக்கும் அமைச்சர் பொறுப்பிற்கு எந்த வகையிலும் பொருத்தமற்றதாகவே ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் அமைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள் ளார். இது ஏற்கத்தக்கதல்ல. 

தமிழக அமைச்சரவையில் நீடிக்கும் தகுதி ராஜேந்திர பாலாஜிக்கு இல்லை. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க முதலமைச்சர் முன்வருவதோடு திண்டுக்கல் சீனிவாசன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

;